Tamilசெய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட தடை விதித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 2021, ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுதந்திரம் பல்வேறு வழிகளில் தலிபான்களால் பறிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உலகம் முழுவதும் இஸ்லாமிய மத பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மதத்தினர் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையான இன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியே குழுவாக செல்லக்கூடாது என தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொது இடங்கள், பூங்காக்களுக்கு செல்லக் கூடாது என்றும், கருத்தடை மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் தலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.