ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்தனர்.