ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்பட வாய்ப்பு! – இம்ரான் கான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். முந்தைய ஆட்சி போல இல்லாமல் மிதமான கொள்கைகளுடன் ஆட்சி நடத்துவோம் என அறிவித்த தலிபான்கள், அதற்கு நேர்மாறாக தற்போது செயல்பட்டு வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்ட கேபினட்டில் பெண்களுக்கு இடம் அளிக்காத தலிபான்களின் செயலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. மேலும், பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு போட்டிகளை பார்வையிடவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

அதேபோல், மைதானத்தில் பெண் பார்வையாளர்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது என்று தலிபான்கள் அரசு அறிவித்துள்ளது. பெண்கள் பொது இடங்களில் செல்லவும், கல்வி கற்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை தலிபான்கள் அமைக்காவிட்டால் ஆப்கானிஸ்தானில் விரைவில் உள்நாட்டு போர் ஏற்படலாம். அது பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்படும் பட்சத்தில் மனிதாபிமான மற்றும் அகதிகள் பிரச்சினைகளே முதற்கட்ட கவலைக்குரிய விஷயங்களாக இருக்கும். ஆயுத கும்பல்கள் ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தலாம். அவ்வாறு நடந்தால் அது நிலைத்தன்மையற்ற மற்றும் குழப்பமான ஆப்கானிஸ்தானாக அமையும்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools