Tamilசெய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது சரியான முடிவு – அதிபர் ஜோ பைடன் பேச்சு

அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து தலிபான்களை ஒடுக்கி வைத்திருந்தனர். சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

அப்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது, ஆயுதங்கள் வழங்குவது, கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டது. இதற்கான லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்தது.

ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அவர் அறிவித்த சில நாட்களிலேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர்.

தற்போது காபூல் விமான நிலையத்தில் மட்டும் மக்களை வெளியேற்றுவதற்காக அமெரிக்க ராணுவம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் அமெரிக்காவால் செய்து கொடுக்கப்பட்டும், தலிபான்கள் உடனடியாக அதிகாரத்தை பிடித்தது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

ஆனால், அமெரிக்க ராணுவத்தை திரும்பப்பெறும் முடிவில் ஜோ பைடன் உறுதியாக உள்ளார். இந்த முடிவு வரலாற்றில் பதிவு பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம்  வெளியேறுவது தர்க்கரீதியான, பகுத்தறிவு மற்றும் சரியான முடிவு. இந்த முடிவை வரலாறு பதிவு செய்யும்.

தலிபான்கள் அடிப்படை முடிவை எடுக்க வேண்டும். இதற்கு முன் எந்த பயங்கரவாத அமைப்பும் செய்யாத,  ஒருங்கிணைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நல்வாழ்வு வழங்கும் செயலை தலிபான்கள் செய்வார்களா?. அவ்வாறு செய்தால், அதற்கு கூடுதல் உதவி, பொருளாதார உதவி, வர்த்தகம் மற்றும் முழு அளவிலான விஷயங்கள் தேவை.

மற்ற நாடுகள் எங்களை அங்கீகரிக்கிறார்களா? என்று பார்க்கிறார்கள். அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகள் தூதரக நட்பை முறிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். இது எல்லாம் அவர்களின் தற்போதைக்கு பேச்சுதான்.

அவர்களுடைய படைகளை அவர்களால் கட்டுக்குள் வைக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் சொல்வது உண்மையா? இல்லையா? என்று பார்ப்போம்.’’ என்றார்.

மேலும், தலிபான்களை நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு ‘‘உங்களையும் சேர்த்து நான் யாரையும் நம்பமாட்டேன். நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால், நான் நிறைய நம்புவதில்லை. தற்போது நீங்கள் தலிபான்களை நம்புகிறீர்களா?’’ என்றார்.