ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2 பயங்கரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
உள்ளே செல்லும்போது பொதுமக்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டபடியே சென்றதால், பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பில் 28 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர்.
மூன்று போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.