X

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு – நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் கைது

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் போட்டியின் போது அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது.

இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இன்று கோர்ட்டில் டிரம்ப் சரண் அடைவதாக கூறப்பட்டது. இதற்காக அவர் புளோரிடாவில் இருந்து விமானத்தில் நியூயார்க்குக்கு புறப்பட்டார். சுமார் 2.30 மணி நேர பயணத்துக்கு பிறகு நியூயார்க்கை வந்தடைந்த டிரம்ப் அங்குள்ள டிரம்ப் டவர் கட்டிடத்துக்கு சென்றார். அப்போது திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து கைய சைத்தபடி சென்றார்.

அங்கு இரவு தங்கிய டிரம்ப் இன்று வழக்கு விசாரணைக்காக மன்ஹாட்டன் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அங்கு, சுமார் 10-15 நிமிடங்கள் நடைபெறும் விசாரணையில் குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் அவருக்கு வாசிக்கப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.