Tamilசெய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்றும், கடந்த 6-ந் தேதி முதல் அவளை காணவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த தமது மகளை, அந்த விளையாட்டு மூலம் பழக்கமான ஒருவர் அழைத்து சென்றுள்ளார், அவளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் அமுதா கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டில் வரும் வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளன என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அவை வெளிவந்து கொண்டே இருக்கின்றன எனவும் தெரிவித்தனர்.

இதனால் இந்த விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில் மனுதாரர் தரப்பு மகளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.