ஆன்லைன் ரம்மிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குருராஜன் என்ற பொறியாளர், ஆன்லைன் ரம்மியில் பெருமளவில் பணத்தை இழந்ததாலும், அதற்காக வாங்கியக் கடனை திரும்ப அடைக்க முடியாததாலும் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள நான்காவது உயிர் குருராஜன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ள ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இரு முறை சட்டம் இயற்றியும் அதை தடை செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு 5 மாதங்களாகியும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை.

சுப்ரீம் கோர்ட்டுக்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools