ஆன்லைன் மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கும் முறை – பதிவுத்துறையின் புதிய வசதி
ஆன்லைன் மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கிக் கொள்ளும் முறையை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கி வைத்தார். அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாகவும் விரைவாகவும் பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம்.
அதற்கு ஏற்றபடி மென்பொருளில், ‘பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை’ என்ற வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
“https://tnreginet.gov.in” என்ற இணையதளத்தில் முதலில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் புதிய உள்நுழைவை (லாக் இன்) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதற்குரிய பயனர் பெயர், கடவுச்சொல்லை (யூசர் நேம், பாஸ்வர்டு) உள்ளடு செய்து உள்நுழைவிற்குள் சென்று, பதிவு செய்தல், ஆவணப் பதிவு ஆவணத்தை உருவாக்குக என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
ஆவணத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொள்ளலாம். ஆவணத்தை உருவாக்க சில விவரங்களை உட்புகுத்த வேண்டும்.
தாங்கள் பதிவு செய்ய விரும்பும் ஆவணத்தின் தன்மையை அதாவது, அந்த ஆவணம் விற்பனை ஆவணமா? தான செட்டில்மெண்ட் ஆவணமா? குத்தகை ஆவணமா? அடமான ஆவணமா? போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
சொத்தினை விற்பவர், அந்த சொத்தினை வாங்கிய முன் ஆவண விவரங்களை உள்ளடு செய்ய வேண்டும். பூர்வீக சொத்தாக இருந்தால் அதை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. சொத்தினை எழுதிக்கொடுப்பவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளடு செய்ய வேண்டும். முன் ஆவணத்திலிருந்தும் இவ்விவரங்களை செய்யலாம்.
சொத்தினை எழுதிப் பெறுபவரின் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களை உள்ளடு செய்ய வேண்டும். முன் ஆவணத்திலிருந்தும் இவ்விவரங்களை நகல் செய்யலாம். எழுதிகொடுப்பவர் அல்லது எழுதி பெறுபவர், பொது அதிகாரம் அளித்திருந்தால், அந்த முகவரின் பெயர் விவரங்களை உள்ளடு செய்ய வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 2 சாட்சிகளின் விவரங்களை உள்ளடு செய்ய வேண்டும்.
சொத்து விவரத்தின் கீழ் சர்வே எண், சொத்தின் பரப்பு, பட்டா எண் போன்றவற்றை உள்ளடு செய்ய வேண்டும். கைமாற்றுத் தொகை அது செலுத்தப்பட்ட விவரத்தையும் உள்ளடு செய்ய வேண்டும்.
சொத்தின் 4 எல்லைகள் விவரம், சொத்து குறித்த மற்ற விவரங்கள், கட்டிடம் இருந்தால் அதன் விவரங்களை உள்ளடு செய்ய வேண்டும். இந்த விவரங்களை நிரப்பிய உடன் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் தானாகவே திரையில் தோன்றும். கட்டணங்களை இணையதளம் வழியாகச் செலுத்தலாம்.
தற்போது ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டிருக்கும். இதனை அச்சுப்பிரதி (பிரிண்ட் அவுட்) எடுத்து சரிபார்த்துக் கொள்ளலாம். தவறான விவரங்களை இணையதளத்தில் சென்று திருத்திக் கொள்ளலாம். பின்பு வெள்ளைத் தாளிலோ அல்லது முத்திரைத் தாளிலோ அச்சுப்பிரதி எடுத்து பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.
ஆவணத்தை உருவாக்கிய பின் ஆவணப்பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை இணையதளத்தின் வழி முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஆவணத்தை தாக்கல் செய்து காத்திருக்காமல் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த எளிய முறையிலான ஆவண உருவாக்கும் வசதியைப் பயன்படுத்தி தங்களது ஆவணங்களை ஆன்லைன் வழியில் தாங்களே உருவாக்கி பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.