தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:-
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.