ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்

தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பியபோது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது.

இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது. இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools