ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்ற தாமதிக்க கூடாது – அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்து கடனாளியான ஆயுதப்படை காளிமுத்து என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது பலி காளிமுத்து; கடந்த 11 மாதங்களில் 26-ஆவது உயிரிழப்பு. குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர்களைத் தான் தமிழக அரசு பலி கொடுக்கப் போகிறது?

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுனர் குழு அறிக்கை அளித்து 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்று வரை ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்காதது ஏன்? அதற்கு தடையாக இருப்பது எது? ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும்; லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும்.

அத்தகைய அவலநிலை ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை இனியும் தாமதிக்காமல் பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools