Tamilசெய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளுக்கு கவர்னரே காரணம் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடந்தது. மாநில பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார். கட்சித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மீனவர் பிரச்சினை, நதி நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரியும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை, மது ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் பிறகு 2019-ம் ஆண்டு ஜப்பான் ஜைகா நிறுவன நிதி உதவியுடன் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை ஜைகா நிறுவனம் நிதி ஒதுக்கவில்லை. அதனால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும். மதுரையோடு அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணி தொடங்கப்படாமல் உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே போட்டி நடக்கிறது. ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் பா.ம.க. போராட்டம் நடத்தியதால், அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார். தற்போது தி.மு.க. அரசிடமும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், தி.மு.க. அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்திட கவர்னரிடம் அனுப்பப்பட்டும், அவர் ஏன் கையெழுத்திட மறுக்கிறார்? எனத்தெரியவில்லை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டம் நிறைவேற்றிய பின்பு 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தமிழக கவர்னரே பொறுப்பு என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் அந்த நிறுவனங்கள் தினமும் ரூ.200 கோடி சம்பாதிக்கின்றன.

தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது. மதுவால் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் கூட்டி, போதை பொருள் குறித்து கண்டிப்புடன் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மிக மிக முக்கிய பிரச்சினையான போதை பொருள் விவகாரம் உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் அதிக மது விற்பனை தமிழகத்தில்தான் நடக்கிறது. 55 ஆண்டாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள், மது விற்பனையை நம்பித்தான் ஆட்சி செய்கின்றன. மது விற்பனை வருமானம் இல்லை என்றால் ஆட்சி செய்ய முடியாது என்பதுதான் திராவிட மாடலா? என்பது தெரியவில்லை.

தி.மு.க. தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்குகிறார்கள். குறிப்பாக, நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, இதுபோன்று பல வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

2026-ல் சட்டமன்ற தேர்தலில், பா.ம.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு முன்பு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான வியூகங்களை எடுப்போம். கூட்டணி தொடர்பான முடிவுகள் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு எடுப்போம்.

தமிழகத்தில் அதிகம் இளைஞர்கள் இருக்கும் கட்சி பா.ம.க.. அதிக அளவில் இளைஞர்கள் கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பரபரப்பு அரசியல் ஒருபுறமும், பிரிவினை அரசியல் ஒருபுறமும் இருக்கின்றன. நாங்கள் நடுவில் நாகரிகமான அரசியல் செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மதுரை நகருக்கு ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரிகளை உருவாக்கி, மழை நீரை சேமிக்க வேண்டும். இதேபோல் காவிரி, தாமிரபரணி, நம்பியாறு சீரமைப்பு திட்டங்கள் அறிவிப்போடு உள்ளது. அதையும் விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர்த்து மாற்றுக்கட்சியை மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.