ஆன்லைனில் புதிய வகை மோசடி – டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை ‘ஆன்லைன்’ மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-

ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன். அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்.’ என்று கூறுவார்கள்.

நீங்கள் பரிசு கூப்பன் வாங்க தெரியாது என்று சொன்னால், அந்த லிங்கை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் ரூ.1 லட்சத்துக்கு 10 கூப்பன் வாங்கி அனுப்பினால், அடுத்து உங்களுக்கு இந்த கூப்பன் போதாது. இன்னும் 20 பரிசு கூப்பன் கூடுதலாக வேண்டும் என்று குறுந்தகவல் வரும். இப்படி 50 கூப்பன் என்று சொன்னால் ரூ.5 லட்சம் ஆகும். இதெல்லாம் முடிந்த பின்னர், எங்கள் அதிகாரி இப்படி கேட்க மாட்டார். நான் ஏமாந்துவிட்டேன் என்பது உங்களுக்கு தெரியும்.

இதுபோன்ற மோசடி நடைபெற்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும். இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம்.

தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர் ஆகும். உங்களுக்கு வரும் அழைப்பை பார்த்தால் உங்கள் அதிகாரி பெயர், புகைப்படம், எண் போன்றே இருக்கும். ஆனால் அது அவர்கள் கிடையாது. எனவே மோசடி பேர்வழி தான் நம்மை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள். பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools