ஆந்திர மாநிலத்தில் வரலாறு காணாத மழை – தீவுகளாக காட்சியளிக்கும் கிராமங்கள்

ஆந்திராவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் கோதாவரி கிருஷ்ணா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆந்திராவில் ஆற்றங்கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து தீவாக காட்சியளிக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளில் 70 அடி உயரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளம் ஆற்று தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் ஆற்றங்கரையோர கிராமங்கள் தீவாக காட்சியளிக்கின்றன. மேலும் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, மணிலா உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து தாடேபள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

மேலும் வெள்ளம் பாதிப்பு மீட்பு பணிகளுக்காக 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்து வருகின்றனர்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools