ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க சித்தூர், நெல்லூர், கடப்பா, கர்னூல், அனந்தபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 35 பேர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருப்பதியில் உள்ள ருயா ஆஸ்பத்திரியில் நடந்தது.
கூட்டத்துக்கு ஆந்திர மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மோகன்கிருஷ்ணா தலைமை தாங்கினார்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆந்திராவில் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காய்ச்சல் வந்தால், அருகில் உள்ள டாக்டர்களிடமும், ஆஸ்பத்திரிகளிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? அதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து கிராம, நகர, மாநகர மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல், சுவாச கோளாறு ஏற்பட்டால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தும்பல் வந்தால் முகத்தில் துணி வைத்து மூடிக்கொள்ள வேண்டும். கை, கால்களை நன்றாகக் கழுவி விட்டு உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க திருப்பதி ருயா ஆஸ்பத்திரி, மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் புதிதாக சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் வந்தால் உடனே 1100 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.