ஆந்திர மாநிலத்தின் அமைச்சராகும் பவன் கல்யாண் – முக்கிய இலாக்கா ஒதுக்க வாய்ப்பு
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எம்.ஏ.க்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்தார். பா.ஜ.க. மாநில தலைவர் டகுபதி புரந்தேஸ்வரி இதை ஆதரித்தார்.
தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதை ஏற்றுக்கொண்டதால் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதன்படி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு உள்ளதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சரவை பட்டியலில் பவன் கல்யாண் பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளது.
பவன் கல்யாணுக்கு அடுத்தப்படியாக சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் இடம்பெற்றுள்ளார். பட்டியலில் முதன்மை பெற்றிருப்போருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிஞ்சரபு அட்சதை, கொல்லு ரவீந்திரன், நாதெண்டல மனோகர், பொங்குரு நாராயணா, அனிதா வாங்கலபுடி, சத்ய குமார் யாதவ், நிம்மல ராம நாயுடு, நசியம் முகமது ஃபாரூக், ஜனார்தன் ரெட்டி, பாரத், சவிதா உள்ளிட்டோர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.