திருப்பதியில் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
திருப்பதி புனித தலம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். இங்கு, ஆன்மிக அரசியல் நடக்க வேண்டும். ரவுடி ராஜ்யம் நடக்க அனுமதிக்கக்கூடாது. திருப்பதியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளேன்.
திருப்பதி, நெல்லூர் ஆகிய பகுதிகளில் இன்னும் பல தொழிற்சாலைகளை தொடங்க உள்ளேன். திருப்பதி கல்வி நகரமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதியில் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி ஆகியவை புதிதாக தொடங்கப்படும். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.
ஏழை எளிய மக்களுக்கு திருப்பதியில் 9 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன். இன்னும் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. திருப்பதி மருத்துவ நகரமாக மாற்றப்படும். சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இங்கேயே 3 நாட்கள் தங்கி மருத்துவச் சிகிச்சை பெறலாம். திருப்பதியில், ‘‘ஸ்மார்ட் சிட்டி’’ பணிகள் நடந்து வருகிறது. பூமிக்கு அடியில் மின்சார கேபிள் பதிக்கப்பட உள்ளது.
பெண்களுக்காக, ‘‘பத்மாவதி’’ என்ற பெயரில் ஒரு தனித் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. திருப்பதி, ‘நம்பர் ஒன்’ நகரமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து காளஹஸ்திரியில் நடந்த பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-
சித்தூர் மாவட்டம் நான் பிறந்த தாய் வீடு. காளஹஸ்திக்கு நான் பலமுறை வந்துள்ளேன். சிவன் கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். இந்தக் கோவில், தென் கயிலாயமாக திகழ்கிறது. இந்தக் கோவில் பிரசித்திப் பெற்ற ஆன்மிக தலமாக விளங்குகிறது. இதை, திருப்பதி ஏழுமலையான் கோவிலை போல், வளர்ச்சியடைய செய்வேன்.
2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, திருப்பதி பிரசாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி, ஏழு மலையான் சாட்சியாக ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறினார். ஆனால் அவர், நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஐதராபாத்தை நன்கு வளர்ச்சியடைய செய்தோம். மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது, உடுத்திய உடையோடு வெளியேறினோம்.
ஆந்திரா, நிதி பற்றாக்குறையால் இருந்தும் பொதுமக்களுக்காக எந்திரமாக உழைத்தேன். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடி கொண்டே இருக்கும். தற்போது வறண்டு கிடக்கிறது. சொர்ணமுகி ஆற்றை தூர்வாரி சுத்தம் செய்வேன். எனது ஆட்சியில் 62 நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அதில் அந்திரி நீவா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.
சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அதில் செல்போன் நிறுவனங்களும் அடங்கும். வரும் காலத்தில் திருப்பதியில் 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை செல்போன்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தொடங்க ஏற்பாடு செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.