ஆந்திராவில் ஒரே ஆண்டில் போதைக்கு அடிமையாகி 571 பேர் பலி

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. ஆந்திர மாநில எல்லை வழியாக அதிக அளவில் கஞ்சா கடத்தி வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லைகளில் கஞ்சா கடத்தல் தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரெயில் மற்றும் பஸ்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆந்திராவில் கஞ்சா மது போன்றவற்றிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன.

ஆந்திராவில் இளைஞர்கள் அதிக அளவில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் போதைக்கு அடிமையான 571 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகளவு போதைப் பொருட்களை பயன்படுத்தும்போது அவர்கள் நோய்வாய்ப்படுவதும் மற்றும் குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டும் விலை மதிக்க முடியாத உயிரை தற்கொலை மூலம் விட்டு செல்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மாநில அரசு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ஆந்திரா-ஒடிசா எல்லைக்கு அருகில் உள்ள 10 மண்டலங்களில் 973 கிராமங்களில் கஞ்சா பயிரிடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அதை அழித்துள்ளனர்.

ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தனேதி வனிதா இதுகுறித்து சட்டசபையில் தகவல் வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் தற்கொலைகளைத் தடுக்க பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. 4 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருள் அல்லது மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பேரணியில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்றதாக அவர் கூறினார். பிற மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒடிசாவுடன் மாநில அரசு கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools