ஆதித்யா எல்-1 விண்கலத்தில் கவுண்டவுன் இன்று தொடங்கியது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.

சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ம்தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகும். விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும். ஆதித்யா எல்-1, கிரகண நேரங்களிலும் சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.

சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்படுகிறது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும். “விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது.

ராக்கெட் மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது” என தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் அறிவித்த இஸ்ரோ, ஆதித்யா எல்-1 குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டது. இந்நிலையில், செப்டம்பர் 2-ம்தேதி ஏவுவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன் செப்டம்பர் 1 (இன்று), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news