Tamilசெய்திகள்

ஆதரவாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தும் ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அக்டோபர் 7-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறிவிப்பார்கள்’, என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தனர். அவர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, செயற்குழு கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதன்பிறகு நடந்த கருத்து பரிமாற்றம் மற்றும் அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் 7-ந்தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்ற கருத்தின் மீதான தொடர்ச்சியான நிலைப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இருந்து ஆதரவாளர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ஆர்.வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

அதிமுக கட்சி வலிமையாக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமே நான் ஆதரவாகவே இருப்பேன். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2வது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.