ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்த அமைச்சர் செங்கோட்டையன்!

திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோபி ஒன்றியம் பொலவக்காளிபாளையம், பெரியார் நகர், இந்திரா நகர், கடுக்காம்பாளையம் பகுதிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அவருடன் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் நகர் பகுதிக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ்-பிரியா தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கேட்டுக்கொண்டனர். அந்த குழந்தை 10 மாதம் ஆன ஆண் குழந்தையாகும்.

அதை கவனிக்காத அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டுகிறேன் என்று அறிவித்தார். அதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, எங்கள் குழந்தை பெண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை என்று கூறினார்கள். அருகில் இருந்தவர்களும் அமைச்சரிடம் விவரத்தை கூற, உடனடியாக சமாளித்துக்கொண்ட அமைச்சர், பிரசார வேனை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருடன் வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர். அமைச்சர் குழந்தையை கையில் வாங்கி, ராமச்சந்திரன் என்று மீண்டும் பெயர் சூட்டினார்.

ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் பெயர் சூட்டியதும், பின்னர் ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டி குழந்தையை வாழ்த்தியதும் ருசிகரமான சம்பவமாக அமைந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news