Tamilசெய்திகள்

ஆண்களுக்கு நிகராக பெண்கள்! – டாஸ்மாக்கில் நிரம்பி வழியும் கூட்டம்

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இதில் பெரும்பாலும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று போராடுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு நிகராக பெண்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி மது அருந்தும் சம்பவங்களும் நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னப்பநாயக்கனூர் கிராமத்தின் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பிற்பகல் 12 மணி அளவில் கடை திறந்ததும், மது பிரியர்கள் பலரும் மதுபாட்டில்கள் வாங்க வருகிறார்கள்.

அவர்களுக்கு நிகராக 20-க்கும் மேற்பட்ட பெண்களும் அங்கு வந்து தினமும் மதுபாட்டில்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் 20 பெண்கள் கூட்டமாக வந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்கிறார்கள். இதனால் மதுபாட்டில்கள் வாங்க வரும் ஆண்கள் பலரும், பெண்கள் வாங்கி விட்டு சென்ற பிறகு நாம் வாங்கி கொள்ளலாம் என்று ஓரமாக நிற்கிறார்கள்.

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளில் பெண்கள் கூட்டமாக நின்று மது வாங்குவதை வெளியூர்காரர்கள் ஆச்சரியமுடன் பார்த்து செல்கிறார்கள். ஆனால் இது எங்களுக்கு சாதாரண வி‌ஷயம். இதை நாங்கள் அன்றாடமும் பார்க்கிறோம். இப்பெண்கள் ஆண்களோடு சாதாரண டாஸ்மாக் கடையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி செல்வார்கள்.

மதுவை டாஸ்மாக் கடையில் வைத்தே குடிப்பார்கள் அல்லது வீட்டுக்கு கொண்டு சென்று அருந்துவார்கள். குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் மூலம் அப்பெண்களுக்கு மதுபழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள்தான் மதுகுடிக்க பழக்கப்படுத்தி உள்ளனர்.

வயல்வெளிகளில் கடுமையாக உழைத்ததால் களைப்பு தீருவதற்காக மது குடிக்கிறார்கள். வீட்டில் வைத்து மது குடிக்கும்போது ஆண்களுடன் மதுவை பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் மட்டுமே தகராறு ஏற்படும் என்றார்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி கூறும் போது, ‘சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தில் ஒரு சில குடும்பத்தில் பெண்களுக்கு சிறுவயதில் இருந்தே மதுபழக்கத்தை குடும்ப உறுப்பினர்கள் பழக்கப்படுத்திவிடுகிறார்கள்.

அப்பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மது பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். அவர்களிடம் மதுவால் ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். அதன்படி டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும். இல்லையென்றால் சென்னப்ப நாயக்கனூர் கிராமம் போல் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் பெண்களும், ஆண்களுக்கு நிகராக மது அருந்தும் நிலை ஏற்படும்’’ என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று பெண்கள் சார்பில் ஒரு புறம் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் மதுக்கடைக்கு பெண்கள் திரண்டு வந்து மது வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது.

நகர பகுதிகளில் தான் சில இடங்களில் பெண்கள் நாகரீக கலாசாரம் என்ற பெயரில் மது குடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். பொள்ளாச்சியில் உள்ள தனியார் சொகுசு பங்களா மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதி ஆகியவற்றில் மதுபானங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள், ஐ.டி. பெண் ஊழியர்கள் பிடிபட்டு உள்ளனர். ஆனால் கிராமத்திலேயே மது வாங்கி பெண்கள் குடிப்பது வருத்தமாக உள்ளது. இது கலாசார சீரழிவையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *