Tamilசினிமா

ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறையின் வெளிப்பாடு – சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் மீது வி.சி.க போலீஸில் புகார்

இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆணவப்படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சிக்கிறார் என்றால் அவரையே தாக்க முற்படுகிறோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்துக் சென்றால் அவரிடம் சண்டையிட தயாராகிறோம். அப்படி இருக்கும் போது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான் என விளக்கம் அளித்தார்.

இவர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இவரை திட்டி கமெண்டுகளை பதிவிட்டனர். இந்நிலையில், சமூக அமைதியை சீர்குலைப்பதாக நடிகர் ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க. மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், “ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளன; தணிக்கை குழுவிடம் புகார் அளித்த பின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. இப்படத்தில், ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித் கருத்துகளை தெரிவித்துள்ளார். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.