Tamilவிளையாட்டு

ஆட்ட நாயகன் விருதுக்காக ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலி

புனேயில் நடைபெற்ற இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். கடைசியில் இந்திய அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி 80 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் கே.எல். ராகுல் ஒருபுறம் நிற்க, அனைத்து ரன்களையும் விராட் கோலி அடித்து சதத்தை தொட்டார்.

சதம் அடித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது விராட் கோலி பேசியதாவது:-

ஆட்ட நாயகன் விருதை ஜடேஜாவிடம் இருந்து திருடியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க விரும்பினேன். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சில அரைசதங்கள் அடித்துள்ளேன். ஆனால், அவற்றை சதமாக மாற்ற முடியாமல் போனது. நான் கடந்த சில வருடங்களாக அணிக்கு செய்து வரும் பணியின் தொடர்ச்சியாக, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து வைக்க விரும்பினேன்.

ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. எனது ஆட்டத்தை விளையாட அனுமதித்தது. தேவைப்படும் போதெல்லாம் பவுண்டரிகள் அடிக்க, பீல்டர்களுக்கு இடையில் பந்தை அடிப்பதற்கு, விரைவாக ரன்கள் அடிக்க முடிந்தது. வீரர்கள் அறையில் சிறந்த சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு குழுவாக ஒருவரையொருவர் சிறப்பாக நேசிக்கிறோம். அதை நீங்கள் ஆடுகளத்தில் பார்ப்பீர்கள்.

இது நீண்ட நாள் நடைபெறும் தொடர். வீரர்கள் ஆடுகளத்தில் இதுபோன்று சிறப்பாக விளையாட, வீரர்கள் அறையில் சில உத்வேகம் தேவை. சொந்த மண்ணில், ரசிகர்கள் முன் விளையாடுவதை சிறந்த உணர்வு. இதை நாங்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

வங்காளதேசம் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நேரத்தில் ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.