Tamilசெய்திகள்

ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் “என் மண் என் மக்கள்” நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுரை வந்தார். மதுரை வீரபாஞ்சானில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்துக்கு வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற சிறு, குறு தொழில் முனைவோர் டிஜிட்டல் செயலாக்க திட்ட மாநாட்டை தொடங்கி வைத்தார்.

முன்னதாக வாகன தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தில் ஆட்டோமொபைல் தொழில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஒவ்வொரு தொழிலையும் மேம்படுத்த இந்திய அரசு தோளோடு தோள் கொடுத்து ஆதரவு அளித்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை ஆட்டோ மொபைல் தொழில் பகிர்ந்து கொள்கிறது. இது தேசம் தன்னிறைவுடன் திகழ்வதற்கு ஆதாரமான அம்சமாக இத்தொழில் விளங்கி வருகிறது. உற்பத்தியிலும் கண்டுபிடிப்புகளிலும் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் ஆட்டோ மொபைல் துறையின் பங்கு அளப்பரியது.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது. உலக அரங்கில் இத்தொழிலில் தமிழகம் தனது திறமையை நிரூபித்துள்ளது. இத்தொழிலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. ஆகையால் தான் 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சம் வர்த்தக வாகனங்கள், ஒன்றரை லட்சம் ஆட்டோக்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு வாகனத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் தயாரிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள்தான். உலகில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் முனைவோர்களால் உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களை பயன்படுத்துகின்றன. உலக அளவிலான விநியோக சங்கிலியில் நமது தொழில் முனைவோர்கள் முக்கிய அங்கமாக செயல்பட்டு அதை வலுவானதாக மாற்றி வருகின்றனர்.

எனவே நாம் தரத்திலும், நீடித்த நிலையான உற்பத்தி இலக்கிலும் கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத “குறைவான கார்பன் வெளிப்பாடு, மாசற்ற உற்பத்தி” என்ற கொள்கையோடும் செயல்பட வேண்டும். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தொழில் முனைவோர்களின் பங்கு மிகவும் கவனிக்கத்தக்கதாக விளங்கியது. தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்காக முத்ரா, விஸ்வகர்மா போன்ற கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் பல லட்சம் தொழில் முனைவோர்கள் பயனடைந்து வருகின்றனர். சிறுதொழிலின் தரத்தை உயர்த்திட இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தொழில் தொழில் நுட்பத்தையும், திறன்களின் தேவையிலும் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்தி எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிக்க வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மத்திய அரசு அதற்கென தனியான ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

ஒரு கோடி வீடுகள் பயன் பெறும் வகையில் இலவச மின்சாரம், கூடுதல் வருவாய் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவை மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற (சார்ஜிங்) மையங்களாகவும் திகழும் வாய்ப்பும் உருவாகும். ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்காக ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பி.எல்.ஐ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.