ஆட்சியை தக்க வைப்பதற்காகவே பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி! – தம்பிதுரை
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதில் வெற்றி பெறுவதுதான் அ.தி.மு.க.வின் முதல் குறிக்கோள்.
எனவே மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளபோதிலும் 21 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலை மனதில் வைத்து அவை அனைத்திலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்காகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
1998-ல் நடந்த மக்களவை தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தார். அதன் அடிப்படையில்தான் தற்போதும் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அமைவதன் மூலம் பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும்.
எங்களுடைய பல கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக கூறியதன் அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கூட்டணி அமைப்பது தொடர்பாக தே.மு.தி.க.வின் அரசியல் நடவடிக்கைகளை துரைமுருகன் வெளியிட்டது அரசியல் நாகரீகம் இல்லை. காட்டி கொடுப்பது துரைமுருகனுக்கு மட்டும் அல்ல தி.மு.க.வுக்கு கைவந்த கலை.
இவ்வாறு அவர் கூறினார்.