ஆடை- திரைப்பட விமர்சனம்
அமலா பால் நிர்வாணமாக நடித்ததன் மூலம் பெரும் பரபரப்பையும், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திய ‘ஆடை’ எப்படி என்று பார்ப்போம்.
டிவி சேனல் ஒன்றில் பணிபுரியும் அமலா பால் பிராங் ஷோவில் ஈடுபட்டு வருகிறார். ரொம்பவே தைரியமான பெண்ணாக இருக்கும் அமலா, பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், என்று இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதோடு நண்பர்களிடம் விடும் சவாலில் ஜெயிக்க எதுவேண்டுமானாலும் செய்யக்கூடியவர்.
அமலா பாலும், அவரது நண்பர்களும் பணியாற்றும் டிவி சேனலின் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்படும் போது, ஆள் இல்லாத அந்த கட்டிடத்தில் கடைசியாக ஒரு முறை சரக்கு அடித்து கொண்டாடுவோம், என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி அமலா பாலின் தோழி மற்றும் நான்கு ஆண் நண்பர்கள் என மொத்தம் 6 பேர் இரவு ஆளே இல்லாத அந்த கட்டிடத்தில் மது அருந்த, போதை தலைக்கேறி உச்சத்தை தொடுகிறார்கள். விடிந்த பிறகு அமலா பால் மட்டுமே அந்த கட்டிடத்தில் நிர்வாண கோலத்தில் இருக்க, மற்றவர்கள் எங்கு என்றே தெரியவில்லை. தனது நிர்வாண கோலத்தை பார்த்ததும் பதறும் அமலா பால், அங்கிருந்து மானத்தோடு வெளியேறினாரா இல்லையா?, அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார், எதற்காக? போன்ற கேள்விகளுக்கு விடை தான் ‘ஆடை’ படத்தின் மீதிக்கதை.
அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கிறார், இது தான் படத்தின் கதை, என்று பலர் பல விதத்தில் யூகித்திருக்க, அத்தனை யூகங்களையும் உடைத்தெறிந்ததோடு, அமலா பாலின் நிர்வாண காட்சியை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி, பெண்களுக்கு அட்வைஸ் செய்து அப்ளாஷ் பெருகிறார் இயக்குநர் ரத்னகுமார்.
இரண்டாம் பாதி முழுவதும் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பால், நிஜமாகவே ஒரு பெண் அத்தகைய சூழலில் சிக்கிக்கொண்டால், எப்படி பறி தவிப்பார், என்பதை தனது ஒவ்வொரு ரியாக்ஷன் மூலமாக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்ததற்காகவே அமலா பாலை ஆயிரம் முறை பாராட்டினாலும், அதில் இப்படி சிறப்பாக நடித்திருப்பவரை லட்சம் முறை பாராட்டலாம்.
சுகுமார் என்ற வேடத்தில் நடித்திருப்பவர் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோரது இயல்பான நடிப்பும், காட்சிகளுடனேயே இணைந்து வரும் அவர்களது நகைச்சுவையும் சிரிக்க வைக்கிறது. விஜெ ரம்யாவின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. தன்னை கேலி செய்யும் அமலா பாலை அவர் அடிக்க பாயும் காட்சியிலும் எதார்த்தம் தெரிகிறது.
அமலா பாலின் நிர்வாண காட்சியை ஆபாசம் இல்லாமல் படமாக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். எந்த இடத்திலும் முகம் சுழிக்காத வகையில் காட்சிகளை கையாண்டிருக்கும் அவரது ஓளிப்பதிவும், படத்தொகுப்பாளர் சபிக் மொஹமத் அலியின் பணியும் அபாரமாக உள்ளது.
பிரதீப் குமாரின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்வதோடு, சில காட்சிகளில் நம்மை படபடக்க வைத்திருக்கிறது.
டிரைலர் மற்றும் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பையும், யூகங்களையும் ஏற்படுத்திய இயக்குநர் ரத்னகுமார், அத்தனைக்கும் நேர்மாறான திரைக்கதை அமைத்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதும் ஒரே இடத்தில், ஒரே ஒரு கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்ந்தாலும், அதை விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கிறார்.
ரொம்ப போல்டான ஒரு கதையை, அதே போல்டோடு காட்சிப்படுத்தியிருந்தாலும், கண்ணை உருத்தாத வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பல தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும் செய்யப்படும் பிராங் ஷோக்களுக்கு சாட்டையடி கொடுத்ததோடு, பெண்ணிஷம் என்ற பெயரில் எல்லை மீறும் பெண்களுக்கு, அதே பெண் மூலமாகவே அட்வைஸும் கொடுத்திருக்கிறார்.
என்ன தான் தைரியமான பெண்ணாக இருந்தாலும், இப்படி சூழல் வந்துவிட்டால் அவளும் சராசரியான பெண் தான், என்பதை பல திடுக்கிடும் காட்சிகள் மூலம் விளக்கியிருக்கும் இயக்குநர், காமெடி என்ற பெயரில் திணித்திருக்கும் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
படத்தில் சில லாஜிக் மீறல் விஷயங்களும் இருக்கின்றன. குறிப்பாக, பெரிய சேனலில் பணிபுரியும் ஒரு பெண், ரீசார்ஜ் செய்யாமல் இருப்பாரா, அதுவும் ப்ரீபெய்டில் கூட அன்லிமிடேட் வசதி வந்த பிறகு. இப்படிபட்ட ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘ஆடை’ தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தான்.
மொத்தத்தில், இந்த ‘ஆடை’ அவசியம் பார்க்க வேண்டிய படம்.
-ஜெ.சுகுமார்