தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில் முதல் ஆடியோவில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது. அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஆடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடிதர விருப்பமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆடியோ விவகாரம் தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் 2 முறை விளக்கம் அளித்துள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.