திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் முன் ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கோவிலில் நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 21.7.2022 முதல் 25.7.2022 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த 5 நாட்களில் பெரிய அளவிலான கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் முன் ஏற்பாடாக முதல் கட்ட நடவடிக்கைகள் என்ற வகையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், திருத்தணி கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தோம்.
கடந்த வாரம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி சுவாமியை தரிசனம் செய்வதற்கும், ஆடி கிருத்திகை திருவிழாவை சரியான முறையில் கொண்டாடுவதற்கும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அரசு துறை சார்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இன்றைக்கு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். பக்தர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறைகள், குளியலறைகள், கண்காணிப்பு கேமிராக்கள், மின் இணைப்பு, சுகாதார வசதிகள், அதுமட்டுமின்றி, தீயணைப்பு வசதிகள், தகவல் நிலையம் போன்ற பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை சார்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளும், வாகனங்களை நிறுத்துவதற்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், எந்த வகையிலான கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சிறந்த முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அஸ்வத் பேகம், துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, வேலூர் மண்டல நகைகள் சரி பார்ப்பு துணை ஆணையர் ரமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி உடன் இருந்தனர்.