ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா – நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் 2-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் ஆஞ்நேயர் கோவிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெறும். பின்னர் தீபாராதணை நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணி வரை சாமி தரிசனம் நடைபெறும்.

மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் இந்த ஆண்டு முழுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். கட்டண தரிசனம் மற்றும் தர்ம தரிசனத்துக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது.

முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. tn.gov.in/eservices/dharshanbooking என்ற இண்டர்நெட் முகவரியில் தரிசன முன்பதிவு செய்துகொள்ளலாம். கோவில் அலுவலகத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் என்று கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறினார்.

அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 28 பேர் வடையை தயாரிக்க உள்ளனர். இந்த பணிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. வடைகள் 2250 கிலோ உளுந்த மாவு, 600 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 135 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools