இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இதற்கிடையே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7 ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்போதைய மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.