X

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வெல்லும் – கேப்டன் நம்பிக்கை

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்திய ஹாக்கி அணி நேற்று விமானம் மூலம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.

முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது. அத்தகைய சிறந்த செயல்பாட்டை தொடர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்களது பிரிவில் சில கடினமான அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இருப்பினும் நாங்கள் சிறப்பாக தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

இதேபோல் துணைகேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், ‘ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்கு செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு’ என்றார்.

ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ‘பி’ பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி உஸ்பெகிஸ்தானை (காலை 8.45 மணி) சந்திக்கிறது. அடுத்த ஆட்டங்களில் 26-ந் தேதி சிங்கப்பூரையும் (காலை 6.30 மணி), 28-ந் தேதி ஜப்பானையும் (மாலை 6.15 மணி), 30-ந் தேதி பாகிஸ்தானையும் (மாலை 6.15 மணி), அக்டோபர் 2-ந் தேதி வங்காளதேசத்தையும் (பகல் 1.15 மணி) எதிர்கொள்கிறது.

ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 3 முறை தங்கப்பதக்கமும், 9 முறை வெள்ளிப்பதக்கமும், 3 தடவை வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளது. இதில் கடைசியாக 2018-ம் ஆண்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றதும் அடங்கும்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள். ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக், பின்களம்: வருண்குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சஞ்சய், நடுகளம்: நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், ஷாம்ஷெர் சிங், முன்களம்: அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.