ஆசிய விளையாட்டின் வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் காம் பவுண்ட் காலிறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-144 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார். மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை அதிதி 149-143 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
பின்னர் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோதி சுரேகா-அதிதி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஜோதி சுரேகா 149-146 என்ற கணக்கில் வென்று தனிநபர் காம்பவுண்ட் பிரிவு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அதிதி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.
இதேபோல், ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 147-147 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரருடன் சமன் செய்தார். இதையடுத்து ஷூட்-ஆப் முறையில் அபிஷேக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பின் நடந்த அரையிறுதியில் அபிஷேக் வர்மா 147-145 என்ற கணக்கில் தென் கொரிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர் ஓஜஸ் பிரவீன் 150-142 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் அரையிறுதியில் தென்கொரிய வீரரை 150-146 என்ற புள்ளி கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.