ஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் சேர்ப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை.

கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது.

இதில் 2022-ம் ஆண்டு ஹாங்ஜோவ் நகரில் (சீனா) நடக்கும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் இடம் பெறுவது 50 ஓவர் போட்டியா? அல்லது 20 ஓவர் வடிவிலான போட்டியா? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவை வரவேற்றுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, ‘‘2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கு அணிகளை அனுப்ப வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்துவோம்.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் இந்திய அணியால் பதக்கம் வெல்ல முடியும். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் அதிகரிக்கும்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools