மங்கோலியாவின் உலான்பாதர் நகால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், நடப்பு சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த சரிதா மோர், வெண்கலப் பதக்கம்
வென்றார்.
59 கிலோ எடைப்பிரிவில் சரிதா உள்ளிட்ட 5 பேர் பதக்கத்துக்கான சுற்றில் களமிறங்கினர். இதில் ஜப்பான் மற்றும் மங்கோலிய வீராங்கனைகளிடம் தோல்வியைத் தழுவிய சரிதா, அதன்பின்னர்
உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தியதால் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
போட்டி நிறைவடைந்த பின்னர் பேசிய சரிதா கூறுகையில், ‘மங்கோலிய வீராங்கனைக்கு எதிரான போட்டியில் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் சொந்த மண்ணில்
விளையாடியதால் நடுவர்களின் ஆதரவைப் பெற்றார். அவர் ஆடுகளத்தை விட்டு வெளியே சென்றார், ஆனாலும் அவருக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. அதனால் அவருக்கு
சாதகமாக முடிந்தது’ என்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சுஷ்மா, 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். 5 வீராங்கனைகள் பங்கேற்ற பதக்க சுற்றில் சுஷ்மா 2 வெற்றியுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இதேபோல் மனிஷாவுக்கு வெண்கலம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பதக்கத்துக்கான கடைசி போட்டியில் தோல்வியடைந்தார். சோனிகா ஹூடா (68 கிலோ), சுதேஷ் குமாரி (76 கிலோ)
ஆகியோர் பதக்கச் சுற்றுக்கு முன்னேறவில்லை.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. முதல் இரண்டு நாட்களில் கிரேக்க ரோமன் மல்யுத்த பிரிவில் 5 வெண்கலப் பதக்கத்தை
வென்றனர்.