Tamilவிளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் – இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது. இந்நிலையில், நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது. அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-16, 21-11 என்ற கணக்கில் ஹாங்காங் ஜோடியை வென்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 16-21 21-7 21-9 என்ற கணக்கில் வென்றார்.. பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-13, 21-12 என்ற கணக்கில் வென்றது. இதனால் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.