X

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னையில் நடக்கிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா அமைப்பு இணைந்து ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியை சென்னையில் நடத்துகிறது. இந்த போட்டி ஆகஸ்டு 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஆசிய கண்டத்தில் உள்ள ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இவை அனைத்தும் ஆசியாவின் முன்னணி அணிகளாகும்.

ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி போட்டியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. தென் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமான சென்னையில் பல புகழ் பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி மூலம் தமிழ்நாட்டில் ஹாக்கிக்கு மேலும் புத்துயிர் அளிக்கும். இளைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியினை மாபெரும் வெற்றி அடையச் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. கடைசியாக 2007-ம் ஆண்டு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடந்தது. செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி முன்னோட்டமாக அமையும்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு போட்டியாகவும் இது கருதப்படுகிறது. ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் போலோநாத் சிங், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா பொருளாளர் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவர் சேகர் ஜே.மனோகர் உள்ளிட்டோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.