ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், 5ம் நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், மாலை 4 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மலேசிய அணி சிறப்பாக விளையாடியது. இதன்மூலம், போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது. இதைதொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. பின்னர், 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன்மூலம், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணிக்கில் சீனாவை வீழ்த்தி வென்றது.

இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு இந்தியா- தென் கொரியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர். தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர். லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports