ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி – தென் கொரியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடக்க நாளான நேற்று முன் தினம் மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.
இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். தொடர்ந்து, நேற்று மூன்று லீக் ஆட்டங்கள் நடந்தது. மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது. இதனை தொடர்ந்து, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமம் ஆனது.