ஆசிய சாமியன்ஸ் கோப்பை ஹாக்கி – இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்று முன் தினத்துடன் ஒவ்வொரு அணியும் 4 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இந்தியா (10புள்ளி) மலேசியா (9) ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. சீனா (1) வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் தென் கொரியா (5), முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (5), ஜப்பான் (2) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் உள்ளன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஜப்பானுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது 3-வது ஆட்டத்தில் மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 4-வது போட்டியில் தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது, இந்திய அணி 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று (9-ந் தேதி ) எதிர்கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
இந்திய அணி ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டதால் நெருக்கடி இல்லாமல் விளையாடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுடன் ‘டிரா’ செய்தாலே அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். கடைசி ஆட்டம் என்பதால் அந்த அணி அதற்கு ஏற்ப விளையாடலாம்.
இரு அணிகளும் மோதிய 178 போட்டியில் இந்தியா 64-ல், பாகிஸ்தான் 82-ல் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆட்டம் டிரா ஆனது. கடைசியாக கடந்த ஆண்டு ஜகார்தாவில் இரு அணிகளும் மோதிய ஆசிய கோப்பை போட்டி 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. 2021-ம் ஆண்டு டாக்காவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா 2 ஆட்டத்திலும் ( 3-1, 4-3 ) வெற்றி பெற்று இருந்தன.
இன்று நடைபெறும் மற்ற ‘லீக்’ ஆட்டத்தில் ஜப்பான்-சீனா (மாலை 4 மணி) தென் கொரியா-மலேசியா (மாலை 6.15 மணி) அணிகள் மோதுகின்றன. நாளையுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகிறது. 11-ந் தேதி அரைஇறுதி போட்டிகளும், 12-ந் தேதி இறுதி ஆட்டமும் நடக்கிறது.