ஆசிய கோப்பை ஹாக்கி – மலேசியாவுடனான போட்டியை இந்தியா டிரா செய்தது
11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
நேற்று முன் தினம் நடந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை வென்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவானது. இந்திய வீரர்கள் விஷ்ணுகாந்த் சிங், எஸ்.வி.சுனில் மற்றும் சஞ்சீப் எக்செஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.