15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. ஷார்ஜாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்துள்ளது. ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பகர் சமான் 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய குஷ்தில் ஷா 5 சிக்சர் உள்பட 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ஹாங்காங் அணி விக்கெட்டுகள் விழுந்தன. அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். உதிரியாக கிடைத்த 10 ரன்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், ஹாங்காங் அணி 38 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 3 விக்கெட்டும், நசீம் ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.