X

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தான், ஹாங்காங் இன்று மோதல்

15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை முதல் 2 இடங்களை பிடித்து ‘சூப்பர்4’ சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம் அணி வெளியேற்றப்பட்டது. ‘ஏ’ பிரிவில் இந்திய அணி 2 வெற்றியுடன் முதல் இடத்தை பிடித்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றது. 2-வது அணி எது? என்பது இன்று இரவு தெரியும்.

ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது மற்றும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை வீழ்த்தி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இரு அணிகளும் மோதிய 3 ஒருநாள் ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி நம்பிக்கையுடன் ஹாங்காங்கை எதிர் கொள்ளும். அதே நேரத்தில் ஹாங்காங் அணி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விளையாட கடுமையாக போராடும்.

‘சூப்பர் 4’ சுற்று நாளை தொடங்குகிறது. இதில் 4 அணியும் ரவுண்டு ராபின் முறையில் மோதும். ‘லீக்’ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 4-ந்தேதி மோதும் வாய்ப்பு உள்ளது.

6-ந்தேதி ஆப்கானிஸ்தானுடனும், 8-ந்தேதி இலங்கையுடனும் இந்திய அணி விளையாடுகிறது. ‘சூப்பர் 4’ சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி வருகிற 11-ந்தேதி நடக்கிறது.