ஆசிய கோப்பை கிரிக்கெட் – நாளை வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான், இலங்கையில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர்-4 சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. லாகூரில் நடந்த இந்த சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் தோற்கடித்தது. அடுத்து மீதமுள்ள சூப்பர்-4 சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெறுகிறது.
சூப்பர்-4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வுனகா தலைமையிலான இலங்கை அணி, லீக் சுற்றில் தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இதில் ஏற்கனவே வங்காளதேசத்தை வீழ்த்தியுள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும் இலங்கை அணியின் குசல் மென்டிஸ், நிசாங்கா, தனஞ்ஜெய டிசில்வா, அசலங்கா, ரஜிதா, தீக்ஷனா, பதிரனா ஆகிய வீரர்கள் உள்ளனர்.
லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை போராடியே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம். சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கைக்கு சாதகமாக கருதப்படுகிறது. வுகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணி சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோல்வி அடைந்தால் அந்த அணிக்கு கடும் பின்னடைவு ஏற்படும்.
வங்காள தேசம் அணியில் முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரகீம், லிட்டன்தாஸ், தவ்ஹீத் ஹரிதி, தங்தின் அகமது, ஹசன் மக்மூத் சோலபுல் இஸ்லாம் ஆகிய வீரர்கள் உள்ளனர். லீக் சுற்றில் இலங்கையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க வங்காள தேசம் முயற்சிக்கும். கடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இதனால் பேட்டிங்கில் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியமாகும். இந்த ஆட்டம் நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.