ஆசிய கோப்பை கிரிக்கெட் தொரின் அட்டவணை இறுதி செய்யப்பட்டது
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கிடையே, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், ஆசியகோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தானில் லீக் கட்டத்தில் 4 ஆட்டங்கள் இருக்கும். இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இருக்கும். இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் மூன்றாவது ஆட்டம் நடக்கும் என தெரிவித்தார்.
2010-ம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லாவில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும். பாகிஸ்தானில் அந்த அணி நேபாளத்துக்கு எதிராக மோதுகிறது. ஆப்கானிஸ்தான்-வங்கதேசம், வங்கதேசம்-இலங்கை மற்றும் இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆகியவை பாகிஸ்தானில் நடைபெறும் மற்ற 3 ஆட்டங்கள் ஆகும்.