X

ஆசிய கோப்பை கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் விளாசினார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.

கே.எல்.ராகுல் 39 ரன்னும், இஷான் கிஷன் 33 ரன்னும், அக்சர் படேல் 26 ரன்னும் எடுத்தனர். இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டும், சரித் அசலங்கா 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் முதலில் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் இலங்கை அணி 99 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 7வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லாலகே ஜோடி 63 ரன்களை சேர்த்தது. டி சில்வா 41 ரன்னில் அவுட்டானார். கடைசி வரை போராடிய வெல்லாலகே 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ்ப் 4 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது துனித் வெல்லாலகேவுக்கு வழங்கப்பட்டது.

Tags: tamil sports