16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றன.
இந்நிலையில், லாகூரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது.
மெஹிதி ஹசன் 112 ரன்னும், நஜ்முல் ஹொசைன் 104 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இப்ராகிம் சட்ரன், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். இப்ராகிம் சட்ரன் 75 ரன்னும், ஹஷ்மத்துல்லா ஷகிடி 51 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியில், ஆப்கானிஸ்தான் 44.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேச அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு வழங்கப்பட்டது.