X

ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. சார்ஜாவில் நேற்று நடைபெற்ற சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்ங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் டக்அவுட்டானார். ரிஸ்வான் 20 ரன் அடித்தார். சதாப்கான் 36 ரன்னும் இப்திகார் அகமது 30 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 9 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த நிலையில், கடைசி ஓவரில் நசீம்கான்ஷா அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெறச் செய்தார். 4 பந்துகளில் 14 ரன்களை அவர் அடித்தார். இதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால், இந்தியாவின் இறுதி போட்டி வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.