ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
சார்ஜா, 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது.
105 ரன்னுக்குள் இலங்கையை சுருட்டிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், முகமது நபியும், பந்து வீச்சில் பாசல்ஹக் பரூக்கி, முஜீப் ரகுமான், ரஷித் கானும் நல்ல நிலையில் உள்ளனர்.
வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் சமீபகாலங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் சபிர் ரகுமான், முகமது நைம் ஆகியோரும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் வருகை அந்த அணியின் பலத்தை அதிகரிக்கும்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க லீக் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணி 2-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்குள் நுழைய ஆர்வம் காட்டும்.
அதே நேரத்தில் போட்டியை வெற்றியுடன் தொடங்க வங்காளதேச அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 8 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான் 5 ஆட்டத்திலும், வங்காளதேசம் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
சார்ஜா மைதானம் சிறியதாகும். இருப்பினும் அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும். இந்த ஆடுகளம் வழக்கம் போல சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். இரு அணியிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிப்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், நவீன் உல்-ஹக், முஜீப் ரகுமான், பாசல்ஹக் பரூக்கி.
வங்காளதேசம்: முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சபிர் ரகுமான், மெஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.